2021 ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் பெருமளவான ஆப்கானியர்கள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி நாட்டை விட்டு வெளியேறினர். குறிப்பாக ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பெருமளவான ஆப்கானியர்களுக்கு தஞ்சமளித்த முக்கிய நாடுகளாக உள்ளன.
எனினும் அண்மைக்காலத்தில் இந்த நாடுகளில் இருந்து ஆப்கானியர்கள் பெருமளவில் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் தரவுகளின்படி 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 வரை சுமார் 10.82 இலட்சம் பேர் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர். இவர்களில் சுமார் 6.54 இலட்சம் பேர் பாகிஸ்தானிலிருந்தும் 4.27 இலட்சம் பேர் ஈரானிலிருந்தும் திரும்பியுள்ளனர்.
இதே காலப்பகுதியில் சுமார் 4.13 இலட்சம் ஆப்கானியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே ஈரான் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக அல்லது சர்வதேச பாதுகாப்பு தேவைப்படும் நிலையில் சுமார் 30.79 இலட்சம் ஆப்கானியர்கள் இருப்பதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
நாட்டிற்குள் திரும்பும் மக்களுக்கு வீடமைப்பு வேலைவாய்ப்பு, உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளைப் பெறுவதிலும் பெரும் சவால்கள் நிலவுகின்றன. ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் உயிர்காக்கும் உதவிகள் மற்றும் பாதுகாப்புச் சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை தலிபான் ஆட்சியின் கீழ் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றன. கல்வி வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பொது வாழ்க்கையில் பங்கேற்பது உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஆப்கானிஸ்தானின் இடம்பெயர்வு மற்றும் மனித உரிமை நெருக்கடிக்கு நிலையான தீர்வு இன்னும் தொலைவில் இருப்பதாகவே தற்போதைய நிலைமை காட்டுகிறது.
































