ஸ்ரீராம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் பின்னணி
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் கண்ணா, திருமண இணையதளம் மூலம் வரன் தேடியபோது, கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த பெண்ணின் விவரங்களைப் பார்த்துள்ளார். இரு குடும்பங்களும் திருமணம் குறித்து பேசிய நிலையில், சுரேஷ் கண்ணாவின் நடவடிக்கை பிடிக்காததால் திருமணம் நடைபெறவில்லை. ஆனால் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய அவர் விரும்பியதாகவும், பெண் மறுத்ததால் அவரை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்தப் பெண் நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் பெண்ணின் சகோதரர் ஸ்ரீராம் திருமணத்துக்கு தடையாக இருப்பதாகக் கருதிய சுரேஷ் கண்ணா, அவரைப் பழிவாங்கும் நோக்கில் இரண்டு சிறுமிகளை இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்ரீராமுடன் பழக ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தச் சிறுமிகளில் ஒருவரை ஸ்ரீராம் சென்னையில் சந்தித்து பேசியதுடன், அவருடன் செல்ஃபியும் எடுத்துள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமி அளித்த பாலியல் புகாரின் பேரில், ஸ்ரீராம் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் நெய்வேலி போலீஸார் சுரேஷ் கண்ணாவைக் கைது செய்து விசாரித்தபோது, Chennai POCSO case-ன் பின்னணி தகவல்கள் தெரியவந்தன. இந்தத் தகவல் கடலூர் எஸ்.பி. மூலம் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கைப் பதிவு செய்ய விஜயலட்சுமியும் வசந்த் ராஜாவும் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக பெற்றதாக அவர்கள்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரணையில் உறுதியானதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கமிஷனர் அமல்ராஜ் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
































