கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையின்படி நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக தினமும் 600 முதல் 650 நோயாளர்கள் வரை பதிவாகி வந்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்த அதிகரிப்பு காரணமாக நோயாளர்களைக் கட்டுப்படுத்துவதிலும் தேவையான சுகாதார வசதிகளை வழங்குவதிலும் வைத்தியசாலைகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்காக 2025ஆம் ஆண்டு ரூபா 5 பில்லியனும் 2026ஆம் ஆண்டு ரூபா 6.5 பில்லியனும் ஒதுக்கப்பட்டதுடன் தனியார் துறையிலிருந்தும் நிதி பெறப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர் இவ்வளவு நிதி செலவிடப்பட்ட போதிலும் குப்பை மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறையாக மேற்கொள்ள அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
குறிப்பாக கொழும்பின் பேரா ஏரி மற்றும் பெட்டா மிதக்கும் சந்தை பகுதிகளில் கூட குப்பைகள் தேங்கி காணப்படுவதாகவும் மழைக்காலத்தில் டெங்கு அபாயம் அதிகரிக்கும் என்பது தெரிந்திருந்தும் முன்கூட்டியே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
டெங்கு பரவல் சுகாதாரத் துறைக்கு மேலதிக செலவுகளை ஏற்படுத்துவதோடு சுற்றுலாத்துறையையும் பாதித்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் கூட இலங்கைக்கான பயண அறிவுறுத்தலில் டெங்கு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மக்களுக்கு காட்டப்பட்ட ஒரு காட்சி நிகழ்ச்சியாக மட்டுமே மாறியுள்ளதாக விமர்சித்தார்.





























