தற்போது நிலவி வரும் அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட தகவல்களை பொதுமக்களும் ஊடக நிறுவனங்களும் பகிர வேண்டாம் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு தகவல்களைப் பரப்புவது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம் மற்றும் தனியுரிமையை பாதிக்கக்கூடும் என்றும், அவை மனிதக் கடத்தலாளர்கள் மற்றும் பிற குற்றவாளிகளின் கைகளில் சிக்கி தவறான முறையில் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் அமைச்சு எச்சரித்துள்ளது.
குழந்தைகளை சுரண்டல், மனிதக் கடத்தல் அல்லது அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காக இத்தகைய தகவல்களை பயன்படுத்துவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான தகவல்கள், அனர்த்தத்துக்குப் பின்னரான மனிதக் கடத்தல் சம்பவங்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால், 1929 சிறுவர் உதவி தொலைபேசி சேவை, அருகிலுள்ள பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் அல்லது சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருணையும் பொறுப்புணர்வும் அவசியம் என்பதை வலியுறுத்திய அமைச்சு, எந்தச் சூழ்நிலையிலும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் நலனை முதன்மைப்படுத்துமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.





Leave a Reply