கொழும்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமானபோது உலக சந்தை நிலவரத்தை காரணம் காட்டி அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதாகவும் அப்போது குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்களே கையிருப்பில் இருந்தபோதும் விலை அதிகரிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தற்போது யுத்தம் முடிவடைந்து சமாதான நிலை ஏற்பட்டுள்ளதுடன் உலக சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 76 அமெரிக்க டொலர் வரை குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் மூன்று மாதங்களுக்கு முன் காணப்பட்ட விலையை விட தற்போதைய விலை குறைவாக இருப்பதாக தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களில் பெட்ரோல் விலை 48 சதவீதமும் டீசல் விலை 44 சதவீதமும் உயர்த்தப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களும் அதிகரித்து மக்கள் கடும் பொருளாதார சுமையை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப குறைந்தது 40 சதவீதமாவது எரிபொருள் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிக விலைக்கு வாங்கிய எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளன என்ற காரணத்தை முன்வைத்து இந்த விவகாரத்தில் பொறுப்பைத் தவிர்க்கக் கூடாது என்றும் நளின் பண்டார தெரிவித்தார்.




























