“Covoit’ IDFM” எனப்படும் இந்த புதிய செயலி பொதுப் போக்குவரத்துக்கு மாற்றாகவும் அதை நிரப்பும் மையப்படுத்தப்பட்ட இயக்கத் தீர்வாகவும் செயல்படுகிறது. இந்த சேவையின் மூலம் பயணிகள் இரண்டு விதமான கார்பூலிங் வசதிகளைப் பயன்படுத்தலாம். முதன்மையானது திட்டமிட்ட கார்பூலிங் இதில் பயணிகள் தங்கள் புறப்படும் இடம், சேரும் இடம் மற்றும் நேரத்தை செயலியில் பதிவு செய்தால், பொருத்தமான ஓட்டுநருடன் இணைக்கப்படுவர்.
இது வேலை அல்லது பள்ளி பயணங்களுக்கு ஏற்றதாகும். இரண்டாவது வகை நிலையான கார்பூலிங் பாதை; இதில் முன்பதிவு தேவையில்லை. பயணிகள் குறிக்கப்பட்ட நிறுத்தங்களில் சென்று செயலி அல்லது எஸ்எம்எஸ் மூலம் தங்கள் வருகையை தெரிவிக்கலாம். அந்த வழியில் பயணிக்கும் ஓட்டுநர்கள் அவர்களை ஏற்றிச் செல்வார்கள்.
2025க்குள் Cernay-la-Ville, Saint-Quentin-en-Yvelines, Les Ulis மற்றும் Pont de Sèvres ஆகிய பகுதிகளை இணைக்கும் மூன்று நிரந்தர பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன மேலும் புதிய பாதைகள் 2026ஆம் ஆண்டில் படிப்படியாக அறிமுகமாகும். Navigo ஆண்டு, மாதாந்திர மற்றும் Imagine R பாஸ் சந்தாதாரர்களுக்கு தினமும் இரண்டு பயணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 2026 ஏப்ரல் 1 முதல் Navigo பாஸ் இல்லாதவர்கள் 20 கிமீ வரை 50 காசுகள் கட்டணம் செலுத்த வேண்டும அதற்கு மேலான பயணங்களுக்கு கிமீக்கு 10 காசுகள் (அதிகபட்சம் €1.50) வசூலிக்கப்படும்.
ஓட்டுநர்கள் 20 கிமீ வரை ஒரு பயணிக்கு €2 பெறலாம் 30 கிமீ வரை கிமீக்கு 10 காசுகள் (அதிகபட்சம் €3) வழங்கப்படும், ஆனால் மாதாந்திர வருமானம் €200ஐ மீறக்கூடாது. எனினும், Île-de-Franceக்கு வெளியே தொடங்கும் அல்லது முடியும் பயணங்கள், பாரிஸிற்குள் தொடங்கி முடியும் பயணங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துடன் போட்டியாக செயல்படும் பயணங்களுக்கு இந்த மானியம் பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




























