கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த நாட்டை பொறுப்பேற்று திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்டெடுக்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கூறினார்.
2024 செப்டெம்பர் மாதம் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் பெற்றோல் விலை 50 ரூபாய்க்கும் அதிகமாகக் குறைக்கப்பட்டதுடன் டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பருப்பு, அரிசி, முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் பொருளாதாரம் மீளத் தொடங்கிய நிலையில் இயற்கை அனர்த்தங்களும் மத்திய கிழக்குப் போரின் தாக்கமும் நாட்டின் பொருளாதாரத்திற்கு புதிய சவால்களை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட அவர் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் அதிக விலையில் முன்கூட்டியே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதால் உடனடியாக விலைகளை குறைக்க முடியாது என்றும் இருப்பினும் கடந்த 29ஆம் திகதி முதல் எரிபொருள் விலைகளில் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அரச சேவையாளர்களுக்கு சதொச ஊடாக சலுகை விலையில் அரிசி வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியிடப்படும் தவறான விளக்கங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்து பொருளாதார நெருக்கடியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் மகிந்த ஜயசிங்க வலியுறுத்தினார்.



























