வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் ரஷ்ய ஜெட் இயங்கும் ட்ரோன், வெடிமருந்து கிடங்கைத் தாக்கியது. அதன்பின் சுமார் ஆறு மணி நேரம் தொடர்ந்து வெடிப்புகள் கேட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். சிலர் 30 முதல் 50 வெடிப்புகள் வரை கேட்டதாக கூறினர்.
தாக்குதலில் வீடுகளின் கூரைகள் பறந்தன. ஜன்னல்கள் நொறுங்கின. பசுமைக் குடில்கள், காய்கறித் தோட்டங்கள், திராட்சைத் தோட்டங்களும் சேதமடைந்தன. பல குடும்பங்களுக்கு மின்சாரமும் குடிநீரும் துண்டிக்கப்பட்டுள்ளன.
மைலா ஆயுதக் கிடங்கு தாக்குதல் குறித்து மக்கள் கேள்வி
கிடங்கு மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டதே பெரும் கேள்வியாகியுள்ளது. கிராம மக்கள், குடியிருப்புகளுக்கு அருகில் ஆயுதங்களைச் சேமித்த அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினர்.
கிடங்கில் ஆயுதங்கள் இருப்பது தங்களுக்கு முன்பு தெரியாது என சிலர் தெரிவித்தனர். அது மனிதாபிமான உதவிப் பொருட்கள் சேமிக்கப்பட்ட இடம் என நினைத்ததாகவும் அவர்கள் கூறினர்.
சேதமடைந்த வீடுகளில் ராக்கெட் குண்டுகளின் உதிரிப்பாகங்கள், கண்ணிவெடிகள், கொத்துக் குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை அகற்றப்பட்டுள்ளன. சில எரிந்த தோட்டாக் பெட்டிகள் தொடர்ந்து பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டியுள்ளது.
வெடிமருந்து கிடங்கின் அருகே இருந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த 30 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணியின்போது மேலும் வெடிப்புகள் கேட்கப்பட்டன. புதிய ட்ரோன் அச்சுறுத்தல் காரணமாக சில நேரங்களில் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த கிடங்கு அமைக்கப்பட்ட விதம் குறித்து உக்ரைன் புலனாய்வு சேவை குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. கீவ் அருகே உள்ள விஷ்னேவே பகுதியில் ஜூலை தொடக்கத்தில் நடந்த இதேபோன்ற சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 280 வீடுகள் சேதமடைந்தன. அப்போது இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ரஷ்ய தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், குடியிருப்புகள் அருகே உள்ள வெடிமருந்து கிடங்குகள் குறித்து மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், கிடங்கை அமைத்தவர்களையும் அவர்கள் பொறுப்புக்கூறச் செய்தனர்.
































