இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்பட்டு வந்த Merchant Discount Rate (சேவைக்கட்டணம்) முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் எந்த கூடுதல் செலவும் இன்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற முடியும்.
தற்போது இலங்கையில் 89% வயதுவந்த மக்களுக்கு வங்கி வசதிகள் இருப்பதுடன் CEFTS கட்டமைப்பின் மூலம் ஒரு காலாண்டில் 6.3 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான 68 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. மேலும் 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 450,000 வர்த்தக நிலையங்களில் LankaQR பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தாள்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளதால் டிஜிட்டல் கொடுப்பனவு பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான வாராந்த மற்றும் மாதாந்த அதிர்ஷ்ட லாபப் போட்டிகளும் நடத்தப்பட்டு முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு 1,000,000 ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
மூன்று மொழிகளில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் QR பயன்பாட்டை அதிகரித்து வேகமான பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான பரிவர்த்தனை கலாச்சாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.




























