இதன்போது வியாபாரிகள் விவசாயிகள் என்ற பெயரில் அரசாங்கத்துக்கு நெல் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உர மானியப் பயனாளி விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை நெல் கொள்வனவு நிலையங்களுக்கு வழங்குவது விவசாயி பயிரிட்டுள்ள ஏக்கர் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு அவர் விற்பனை செய்யக்கூடிய நெல் அளவை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும் நெல் கொள்வனவின்போது எடையை அடிப்படையாகக் கொண்ட தரநிலைப்படுத்தப்பட்ட நடைமுறையை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. அரசாங்கத்தின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில் கூட்டுறவு மற்றும் தனியார் களஞ்சியங்களை வாடகை அடிப்படையில் பெற்று சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை இணைந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு சேமிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் நியாயமான மற்றும் திறமையான சேவையை வழங்க முடியும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பழமையான கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்தல் அவற்றை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் மற்றும் வனவிலங்கு தொல்பொருள் பாதுகாப்புப் பகுதிகளை ஒட்டிய மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் போது நிலவும் சட்ட மற்றும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.































