கொலை வழக்கிலிருந்து தப்ப திட்டம்
மவ் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் சிங், 2016ஆம் ஆண்டு முன்ஷிபுரா ரயில் நிலையம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ராஜ்குமார் ராஜ்பார் மற்றும் அவரது நண்பர் சுதர்ஷன் ராஜ்பார் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜாமீனில் இருந்த ராஜ்குமார், பின்னர் தனது மரணம் நிகழ்ந்ததாகக் காட்டும் ஆவணங்களைத் தயாரித்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மே 30ஆம் தேதி காஜிபூரில் தனது மரணத்தைப் போலியாக அரங்கேற்ற அவர் திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். தகன மேடையில் உடல் கிடப்பது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட படம் பயன்படுத்தப்பட்டது. மனித உடலுக்குப் பதிலாக ஓர் ஆடு தகனம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது போன்ற புகைப்படங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் மவ் நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டு, உறவினர்கள் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து ராஜ்குமார் சுமார் ஒன்றரை ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.
குவாஜாஜஹான்பூர் பகுதி அருகே அவரை போலீஸார் கைது செய்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுப் குமார் கூறுகையில், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத ராஜ்குமார் பங்குச் சந்தை வர்த்தகராக இருந்ததாகவும், பல நகரங்களில் முக்கிய நபர்களிடம் முதலீடு செய்வதாகக் கூறி பணம் வசூலித்ததாகவும் தெரிவித்தார். கொலை வழக்கிலிருந்து தப்புவதுடன், அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்காகவும் இந்த நாடகம் திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார். Rajkumar Rajbhar fake death வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


































