செக் குடியரசின் ஒஸ்ட்ராவா நகரில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் அவர் 86.57 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெற்றியைப் பதிவு செய்தார். முதல் முயற்சியில் 85.87 மீற்றரும் இரண்டாவது முயற்சியில் 86.30 மீற்றரும் பதிவு செய்த அவர் மூன்றாவது முயற்சியில் 86.57 மீற்றர் தூரத்தை எட்டி போட்டியின் சிறந்த பெறுதியை நிலைநாட்டினார்.
இந்தப் போட்டியில் கிரெனடாவின் இரட்டை உலக சாம்பியனான அண்டர்சன் பீட்டர்ஸ் 84.27 மீற்றருடன் இரண்டாம் இடத்தையும், தென் ஆபிரிக்காவின் டௌ ஸ்மித் 83.90 மீற்றருடன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். அண்மையில் ரோம் நகரில் நடைபெற்ற வொண்டா டயமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய இலங்கை தேசிய சாதனையைப் படைத்த ருமேஷ் தரங்க உலக ஈட்டி எறிதல் வரலாற்றில் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பெறுதிகளில் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
தற்போது உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள அவர் இந்த ஆண்டின் சிறந்த மூன்று தூரப் பெறுதிகளையும் தன்னகத்தே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வார இறுதியில் தோஹாவில் நடைபெறவுள்ள டயமண்ட் லீக் தொடரில் பங்கேற்ற பின்னர் இந்த ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தயாரிப்புகளை முன்னெடுக்க அவர் நாடு திரும்பவுள்ளார்.





Leave a Reply