சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே உள்ள மேலமங்கலத்தில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி ரவுடி சுள்ளான் மதன் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட தளங்களில் வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ் வீடியோக்கள் பரவின. “இன்னும் பல தலைகள் சிதறும், ரத்த ஆறு ஓடும்” போன்ற மிரட்டல் வாசகங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்
இந்தக் கொலை வழக்கில் மானாமதுரை மிதுன் மாணிக்கம், திருமங்கலம் பிரதீப், உடைகுளம் பாலமுருகன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை எச்சரிக்கைக்குப் பிறகு சில இளைஞர்கள் தங்கள் கணக்குகளில் வெளியிட்ட வீடியோக்களை நீக்கினர். பணம் கொடுத்து பிறர் தயாரித்த வீடியோக்களைப் பதிவிட்டதாக சிலர் தெரிவித்தனர்.
தங்களது சொந்த கணக்குகள் கண்காணிப்பில் சிக்காமல் இருக்க, குற்றப்பின்னணி இல்லாதவர்களின் கணக்குகளை ரவுடி கும்பல்கள் பயன்படுத்தியதாக போலீசார் கூறினர். பதிவுகளில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் மற்றும் பின்னணி இசை குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் கணக்குகளும் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sivaganga rented Instagram accounts விவகாரத்தில் இதுவரை வன்முறையைத் தூண்டிய 41 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் 3 முகநூல் கணக்குகள் என மொத்தம் 44 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், தொடர்புடைய 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களைக் கண்காணிக்க ‘மீடியா மேனேஜ்மெண்ட்’ சென்டர் மூலம் 24 மணி நேர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.






























