TVK ஆதரவாளர் கைது – விசில் சின்ன வீடியோ வைரல்
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்ந்த சக்திவேல் என்ற நபர் வாக்குச்சாவடிக்குள் சென்று ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்ததை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் முன்பே வாக்கு ரகசியத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வாக்குச்சாவடிக்குள் மொபைல் பயன்படுத்தக்கூடாது என்றும் கடுமையாக எச்சரித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை விதிமீறலாக கருதப்பட்டது.
இந்த சம்பவம் வாக்குச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். தேர்தல் விதிகளை மீறியதற்காக போலீசார் சக்திவேலை கைது செய்தனர்.
வாக்கு ரகசியத்தை மீறி அதை பொதுவெளியில் வெளியிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று வரும் நிலையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக செயல்பட்டு வரும் சூழலில் இத்தகைய விதிமீறல்கள் தேர்தல் செயல்முறைக்கு சவாலாக மாறி வருகிறது.
இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது.







Leave a Reply