அகதி முறையில் பெரிய மாற்றங்கள் – இங்கிலாந்து
இங்கிலாந்து அரசு தனது அகதி (asylum) மற்றும் குடியேற்ற (immigration) முறையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் நாட்டிற்கு சட்டவிரோதமாக வரும் குடியேற்றத்தை குறைப்பதும் அகதி முறையை கடுமையாக்குவதும் நோக்கமாக கொண்டுள்ளது.
குறிப்பாக, அகதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காலம் நிரந்தர குடியுரிமை பெறும் காலம் மற்றும் அரசின் உதவிகள் போன்ற பல முக்கிய அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி அகதி அந்தஸ்து (refugee status) பெற்றவர்கள் முன்புபோல் 5 வருடங்கள் தங்க அனுமதி பெறமாட்டார்கள். அதன் பதிலாக 30 மாதங்கள் (2½ வருடங்கள்) மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்படும்.
அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் நாட்டில் பாதுகாப்பு நிலைமை எப்படி உள்ளது என்பதை அரசு மதிப்பாய்வு செய்யும். அந்த நாட்டில் நிலைமை பாதுகாப்பானதாக கருதப்பட்டால், அந்த நபர் மீண்டும் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படலாம்.
மேலும் நிரந்தர குடியுரிமை (settlement) பெறுவதற்கான காலமும் அதிகரிக்கப்பட உள்ளது. சில சந்தர்ப்பங்களில் அகதிகள் 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.வேலை அல்லது கல்வி போன்ற சட்டபூர்வ விசா வழிகளில் மாறினால் மட்டுமே முன்கூட்டியே நிரந்தர அனுமதி பெற வாய்ப்பு இருக்கும்.
இந்த மாற்றங்கள் “core protection model” எனப்படும் புதிய கொள்கையின் ஒரு பகுதியாகும். இந்த முறைப்படி, அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்கும் பழைய முறையை விட தற்காலிக பாதுகாப்பு வழங்கி காலகாலமாக மீளாய்வு செய்யப்படும். இது டென்மார்க் போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள முறையை பின்பற்றுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என்றும் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீட்டு (appeal) நடைமுறைகளும் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்குபவர்கள் அல்லது அரசின் விதிகளை மீறுபவர்கள் அரசு வழங்கும் வசதி மற்றும் உதவிகளை இழக்கக்கூடும்.
அத்துடன் வயது சரிபார்ப்பு செயல்முறைகளில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்றும், புதிய சட்ட விதிகள் படிப்படியாக 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்து மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. அடிக்கடி மதிப்பாய்வு செய்யப்படும் தற்காலிக அனுமதி அகதிகளின் வாழ்க்கைத் திட்டம், வேலை, குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் நிலைத்தன்மையின்மையை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.





Leave a Reply