பிரிட்டன் பிரதமர் Keir Starmer தலைமையிலான லேபர் கட்சிக்குள் கடும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது. அண்மைய உள்ளூராட்சி தேர்தல்களில் லேபர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து பல லேபர் எம்.பிக்கள் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் எனக் கோரியுள்ளனர். இதன் பின்னணியில் முன்னாள் சுகாதார செயலாளர் Wes Streeting தலைமையைக் கைப்பற்றும் நோக்கில் அரசில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதேவேளை முன்னாள் துணைப் பிரதமர் Angela Rayner தனது வரி தொடர்பான சர்ச்சையை தீர்த்துக்கொண்டதால் எதிர்கால தலைமைப் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் Andy Burnham மீண்டும் நாடாளுமன்ற அரசியலுக்கு திரும்பி லேபர் தலைமைக்கான முக்கிய வேட்பாளராக மாறக்கூடும் என்ற அரசியல் ஊகங்களும் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில் மன்னரின் உரைக்கு முன் ஸ்டார்மரும் ஸ்ட்ரீட்டிங்கும் இடையே அவசர சந்திப்பு நடைபெற்றதுடன் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் லேபர் அரசின் எதிர்காலம் குறித்து பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஸ்டார்மர் தலைமையை மாற்றும் முயற்சி கட்சியை மேலும் குழப்பத்துக்குள் தள்ளக்கூடும் என சில மூத்த தலைவர்கள் எச்சரித்துள்ள நிலையில் லேபர் கட்சியின் எதிர்கால திசை குறித்து பிரிட்டன் அரசியலில் பெரும் விவாதம் நிலவுகிறது.





Leave a Reply