தந்தை–மகள் பாசத்துக்குள் விரியும் மர்மம்
2.50 நிமிடங்கள் ஓடும் இந்த Appa Kutty trailer, தாயில்லாமல் வளரும் ஒரு மகளுக்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் காட்சிகளுடன் தொடங்குகிறது. மகளின் பள்ளி ஆசிரியைக்கு, அம்மா இல்லாமல் வளரும் அந்தக் குழந்தை மீதும், அவளது அப்பா மீதும் அன்பு உருவாகும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சிங்கிள் பேரண்ட் லவ் கதை என நினைக்க வைக்கும் நிலையில், இடையிடையே வரும் அதிரடி சண்டைக் காட்சிகள் அந்த எதிர்பார்ப்பை மாற்றுகின்றன. மேலும், குழந்தையின் அம்மா பற்றிய பின்கதையும் டிரெய்லரில் சஸ்பென்ஸை உருவாக்குகிறது. இதற்கிடையில், அந்த அப்பாவும் மகளும் நீதிமன்றக் கூண்டுக்குள் நிற்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. மகளின் வாழ்க்கைக்காகப் போராடும் அப்பாவின் உணர்வுப்பூர்வமான கதையை வித்தியாசமாக எவ்வாறு காட்டியிருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பையும் டிரெய்லர் அதிகரிக்கிறது.
விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தை மு. மாறன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியுடன் பிரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்பிரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜீவ் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ‘அப்பா குட்டி’ திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.






























