”சங்கமம் 2026” என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாபெரும் கலாசார நிகழ்வில் 5,000 இற்கு மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் இணைந்து நடனமாடினர். இதன் மூலம் முன்னதாக 416 கலைஞர்கள் இணைந்து நிகழ்த்தியிருந்த உலக சாதனையானது முறியடிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு காலி முகத்திடலை வண்ணமயமான கலாசார அரங்காக மாற்றியது. பாரம்பரிய இசை மற்றும் நடன அசைவுகளால் பார்வையாளர்கள் மெய்மறந்தனர்.
இந்த நிகழ்வு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வழிகாட்டல் மற்றும் கருத்தாக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் Sangamam Global Academy மற்றும் இலங்கையின் Sangamizh Liya Holidays ஆகியவை இணைந்து நிகழ்வை ஒருங்கிணைத்தன.
இந்தியாவில் நடைபெற்ற வெளிநாட்டு தமிழர் மாநாட்டின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த கின்னஸ் உலக சாதனை நடுவர் ரிஷி நாத் நிகழ்வை நேரில் கண்காணித்து மதிப்பீடு செய்தார். அனைத்து நடைமுறைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய உலக சாதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த சாதனை இலங்கையின் கலை மற்றும் கலாசார திறமையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளதுடன் பரதநாட்டிய கலைக்கு புதிய மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.
































