சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அரசியல் சிந்தனைகள் ஆட்சிமுறை தேசிய முன்னேற்றக் கொள்கைகள் மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பான கருத்துகளை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழா பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது. இதனுடன் இணைந்து “இலங்கையும் சீனாவும் நவீனமயமாக்கல் பாதையில் கைகோர்த்து பயணிப்பதற்கான அனுபவப் பகிர்வு” என்ற தலைப்பில் மாநாடும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர் ஷீ ஜின்பிங்கின் புதிய கால சீன சிறப்புமிக்க சமூகவாத சிந்தனை மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி உயர்தர பொருளாதார முன்னேற்றம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தன்னிறைவு, கிராமப்புற மறுமலர்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீனாவின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் அடிப்படை கொள்கையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் “பாதை மற்றும் மண்டலம்” உள்ளிட்ட உலகளாவிய வளர்ச்சி பாதுகாப்பு மற்றும் நாகரிக முன்முயற்சிகள் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் பரஸ்பர நன்மையை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக்காக தனது பங்களிப்பை தொடரும் என்றும் தெரிவித்தார்.
உலகளாவிய சவால்களை நாடுகள் இணைந்து எதிர்கொள்வதன் மூலம் அனைத்து மக்களுக்கும் வளமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதில் சீனா உறுதியாக நம்புவதாகவும் அந்த இலக்கை நோக்கி இலங்கையுடனான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் விரிவுபடுத்த தயாராக இருப்பதாகவும் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
































