ஐரோப்பிய ஒன்றியம் (EU) வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலை மற்றும் குடியிருப்பு அனுமதிகளை எளிமைப்படுத்தும் முக்கியமான புதிய “Single Permit” திட்டத்திற்கு இறுதி அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய விதிமுறைப்படி இனி EU-வில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு நபர்கள் தனித்தனியாக வேலை அனுமதி மற்றும் குடியிருப்பு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.
ஒரே விண்ணப்பத்தின் மூலம் இரண்டையும் பெற முடியும். இந்த மாற்றம் அதிகாரப்பூர்வமாக 2026 மே மாதத்திற்குள் அனைத்து உறுப்புநாடுகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் விண்ணப்ப செயல்முறையை வேகமாகவும் தெளிவாகவும் மாற்றுகிறது. அதிகாரிகள் விண்ணப்பத்திற்கு அதிகபட்சம் 90 நாட்களுக்குள் முடிவு வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இதில் உள்ளது. மேலும் EU-வில் ஏற்கனவே சட்டபூர்வமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பாமல் அங்கிருந்தே விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
புதிய விதிகளின் கீழ் தொழிலாளர்களுக்கு கூடுதல் உரிமைகளும் வழங்கப்படுகின்றன. அவர்கள் வேலை மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் பெறுகின்றனர் மேலும் வேலை இழந்தாலும் உடனடியாக நாட்டை விட்டு செல்ல வேண்டிய அவசியமில்லை 3 முதல் 6 மாதங்கள் வரை EU-வில் தங்க அனுமதி கிடைக்கும். இதனால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் EU-விற்கு வெளிநாட்டு திறமையான பணியாளர்களை ஈர்ப்பதும் வேலைவாய்ப்பு நடைமுறைகளை ஒருங்கிணைப்பதும் ஆகும். அதே நேரத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உள்ளூர் தொழிலாளர்களுக்கு சமமான சம்பளம் வேலை நேரம் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன.






























