புதிய விதிகளின்படி ஒரு பொருளின் இரண்டு ஆண்டு சட்டபூர்வ உத்தரவாதக் காலத்திற்குள் அதனை மாற்றுவதற்குப் பதிலாக பழுதுபார்க்க நுகர்வோர் தெரிவு செய்தால், அந்தப் பொருளின் உத்தரவாதம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு முன்னர் இந்த நீட்டிப்பு ஆறு மாதங்களாக இருந்தது.
அதேநேரம், விற்பனையாளர் பழுதுபார்ப்பதற்குப் பதிலாக புதிய பொருளை வழங்கினால், மாற்றப்பட்ட பொருளுக்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படும்.
மேலும் உத்தரவாதக் காலம் முடிந்த பின்னரும் சில சாதனங்களை பழுதுபார்க்கக் கோரும் உரிமை நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் கைத்தொலைபேசிகள், கைக்கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள், பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் மற்றும் தூசி உறிஞ்சும் கருவிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
சாதனம் மற்றும் அதற்குத் தேவையான உதிரிப்பாகத்தைப் பொறுத்து வாங்கிய நாளிலிருந்து 5 முதல் 10 ஆண்டுகள் வரை உற்பத்தியாளரிடம் பழுதுபார்ப்பைக் கோர முடியும். உத்தரவாதம் முடிந்த பின்னர் மேற்கொள்ளப்படும் இந்தப் பழுதுபார்ப்பு இலவசமானதல்ல. எனினும் அதற்கான கட்டணம் நியாயமானதாகவும் பழுதுபார்க்க எடுத்துக்கொள்ளப்படும் காலம் ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
பழுதுபார்ப்பது சாத்தியமற்றதாக இருந்தால் மட்டுமே உற்பத்தியாளர் மறுக்க முடியும். உதிரிப்பாகங்களின் செலவு அதிகம் என்பதை மட்டும் காரணமாகக் காட்டி மறுக்க முடியாது. ஏற்கனவே வேறொருவரால் சாதனம் பழுதுபார்க்கப்பட்டிருந்தாலும் அதனை மட்டும் காரணமாகக் கொண்டு மறுப்பதற்கும் அனுமதி இல்லை.
மேலும், 2027 முதல் ஐரோப்பிய நாடுகளில் பொருத்தமான பழுதுபார்ப்பாளர்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பொருட்களின் விற்பனையாளர்களைக் கண்டறிய உதவும் இணையத் தளங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.






























