சிறைக் காவலர்களைத் தாக்கி தப்பிய கைதிகள்
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அக்டோபர் 26-ஆம் தேதி இரவு சுமார் 10.50 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மூன்றாம் பிளாக்கில் இருந்த விசாரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்ற கைதிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கு சென்ற காவலர் ஸ்டாலின் பிரபு மற்றும் முதன்மைத் தலைமை வார்டன் மதன் மோகன் ஆகியோரை சில கைதிகள் போர்வையைப் பயன்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் மூன்றாம் பிளாக்கின் கதவைத் திறந்து பிரதான நுழைவாயில் நோக்கி சென்ற கைதிகள், இரவு 11.05 மணியளவில் தாழ்ப்பாளைத் திறந்து சிறையிலிருந்து தப்பினர். மொத்தம் 17 கைதிகள் தப்பியதாகவும், அவர்களுக்கு மீனாட்சி சுந்தரம், திருப்பதி, கருப்பசாமி ஆகியோர் உதவியதாகவும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தப்பிச் செல்லும்போது முதன்மைத் தலைமை வார்டன் மதன் மோகன் அணிந்திருந்த சுமார் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியையும் கைதிகள் பறித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சிறைக் காவலர் தங்கப்பாண்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Theni jail escape தொடர்பாக, சம்பவம் நடந்த இரவு பணியில் இருந்த சிறைக் காவலர்களை இடைநீக்கம் செய்ய சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.































