குத்தகை நீட்டிப்பு தொடர்பில் மோதல்
கவுகாத்தியில் உள்ள பிலாஸ் இன் ஹோட்டலை கனகாந்த கோகோய் என்பவர், ஹெலனா பராலியிடம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். ஹோட்டல் குத்தகையை நீட்டிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தப் பிரச்னை குறித்து பேசுவதற்காக ஹெலனா பராலி தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு ஹோட்டலுக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட மோதலில், கோகோய் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெலனா பராலி, அவரது சகோதரர் புதேவ் பராலி, மகன் தேவர்ஷி காஷ்யப், மருமகள் ரினிகி காஷ்யப் மற்றும் கார் ஓட்டுநர் நாராயண் தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஹோட்டல் பராமரிப்பாளர் சத்யேந்திர பதக் காயமடைந்தார். தகவல் கிடைத்ததும் போலீஸார் அங்கு சென்று கனகாந்த கோகோயைக் கைது செய்ததுடன், துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இரவு 9 மணியளவில் சம்பவம் நடந்ததாக கவுகாத்தி போலீஸ் கமிஷனர் டாக்டர் பார்த்த சாரதி மஹந்தா தெரிவித்தார். ஆறு பேர் துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்த நிலையில், ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், ஆரம்பகட்ட விசாரணையில் குத்தகைத் தகராறே காரணம் என தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த Guwahati hotel shooting சம்பவத்தில் உயிரிழந்த நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; மற்றொருவர் அவர்களது கிராமத்தைச் சேர்ந்தவர்.






























