பிரான்சில் அகதி (Refugee) அல்லது சர்வதேச பாதுகாப்பு கோரிக்கை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு முக்கியமான புதிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 மார்ச் 1 முதல் OFPRA (Office français de protection des réfugiés et apatrides) இனி அகதி விண்ணப்பதாரர்களின் அசல் பாஸ்போர்ட் மற்றும் பிற அடையாள ஆவணங்களை நிரந்தரமாக வைத்திருக்காது.
இதற்கு பதிலாக விண்ணப்பத்துடன் தெளிவான நகல்கள் (copies) மட்டும் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் கீழ் அகதி நேர்முகப் பேட்டிக்குச் செல்லும் போது விண்ணப்பதாரர் தனது அசல் ஆவணங்களை கொண்டு வர வேண்டும். அவை OFPRA அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடனடியாக மீண்டும் திருப்பி வழங்கப்படும். அதாவது, முன்புபோல் பாஸ்போர்ட்கள் OFPRA காப்பகங்களில் நிரந்தரமாக வைக்கப்படாது.
முன்னர் அகதி விண்ணப்பத்தின் போது ஒப்படைக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் மற்றும் பிற அடையாள ஆவணங்களை OFPRA தனது காப்பகங்களில் வைத்துக்கொண்டது. பலருக்கு பிரான்ஸ் குடியுரிமை பெற்ற பின்னரும் அந்த ஆவணங்களை மீண்டும் பெற சிக்கல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றம் நிர்வாக செயல்முறையை எளிமைப்படுத்தவும் OFPRA காப்பக சுமையை குறைக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அகதி அந்தஸ்து பெற்ற ஒருவர் தனது சொந்த நாட்டின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி மீண்டும் அந்த நாட்டிற்கு பயணம் செய்வது இன்னும் தடை செய்யப்பட்டதே என OFPRA மீண்டும் நினைவூட்டியுள்ளது.






























