ஊரக வளர்ச்சித்துறை கணக்கில் ரூ.22.3 கோடி மாயம்
தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் சுகாதார நல மையங்கள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகளை அமைக்க, 15-வது நிதிக்குழு மூலம் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியிருந்தன. சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள வங்கிக் கிளையில் பராமரிக்கப்பட்ட அந்த நிதியில் இருந்து, கடந்த அக்டோபர் 14 முதல் 30-ம் தேதி வரை சுமார் ரூ.22.3 கோடி மாயமானது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகக் கண்காணிப்பாளர் ராம்பிரசாத், கடந்த நவம்பர் 3-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். பணம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டிருப்பதாக சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்தப் பணம் டிஜிட்டல் சொத்துகளாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பதால், இறுதிப் பயனாளிகளையும் முழுத் தொகையையும் கண்டறிவது சவாலாக உள்ளது.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியின் கணக்கில், ஊழியர்களின் மூன்று மாதச் சம்பளத்துக்காக ரூ.8.15 கோடி கடந்த நவம்பர் 3-ம் தேதி செலுத்தப்பட்டது. ஏற்கெனவே இருந்த ரூ.70 லட்சத்துடன் அந்தத் தொகையும் இரண்டு மணி நேரத்துக்குள் மாயமானது.
டீன் கென்னடி பாபு அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார், பணம் சிறு தொகைகளாக பல கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதைக் கண்டறிந்தனர். சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், கொல்கத்தா பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கமிஷனுக்காக வங்கிக் கணக்குகளை வழங்கியதாகவும், சிலர் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி இந்த மோசடியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், நாகப்பட்டினம் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகக் கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் திருடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மண்டபம் மற்றும் திருப்பூர் தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகக் கணக்குகளும் குறிவைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் சந்தேகமான மின்னஞ்சல், இணைப்பு, கோப்புகளைத் திறக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. Government fund cyber theft வழக்குகளில் பணத்தை மீட்க வங்கிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என சைபர் குற்ற வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.































