இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை (11) கொழும்பில் பரிமாறப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜயசிங்க ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அவசர சேவையின் பதிலளிப்பு நேரத்தை குறைக்கும் திட்டம்
கொழும்பில் நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் போது, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னிலையில் ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.
இலங்கை தலைமையின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்படும் 1990 சுவ செரிய ஆம்புலன்ஸ் படையை வலுப்படுத்துவதுடன், அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்கும் நேரத்தை 10 நிமிடங்களுக்கும் குறைவாகக் கொண்டுவருவது இதன் நோக்கமாகும்.
India ambulances to Sri Lanka உதவியின் முதல் கட்டமாக, 2016 ஜூலையில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் 88 ஆம்புலன்ஸ்களுடன் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய நிதியுதவி வழங்கப்பட்டது. 2018 ஜூலையில் தீவு முழுவதும் சேவை விரிவுபடுத்தப்பட்டபோது, மேலும் 209 ஆம்புலன்ஸ்கள், செயல்பாட்டு செலவுகள் மற்றும் பயிற்சிக்காக 15.02 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது.
டிக்கோயா மருத்துவமனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் கிளிநொச்சி, வவுனியா மருத்துவமனைகளின் மேம்பாடுகளும் இந்தியாவின் சுகாதாரத் துறை ஒத்துழைப்பில் இடம்பெற்றுள்ளன. மன்னார், முல்லைத்தீவு மற்றும் தெனியாயா மருத்துவமனைகளுக்கான திட்டங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

































