பிராந்திய சுகாதார ஒத்துழைப்புக்கு முன்னுரிமை
இலங்கை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, கூட்டத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்றன. பொது சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய் கட்டுப்பாடு, அவசரநிலைத் தயார்நிலை, சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றம் குறித்து நாடுகள் கலந்துரையாடுகின்றன.
இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டம், பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் சுகாதார முயற்சிகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய் எதிர்நிலைத் தயாரிப்பு, ‘ஒன் ஹெல்த்’ அணுகுமுறை மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் நட்டா அழைப்பு விடுத்தார். மற்ற பிம்ஸ்டெக் நாடுகளுடன் நிபுணத்துவத்தையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
குஜராத்தின் ஜாம்நகரில் பிம்ஸ்டெக் பாரம்பரிய மருத்துவச் சிறப்பு மையத்தை நிறுவி, கூட்டு ஆய்வு, திறன் மேம்பாடு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த BIMSTEC Health Ministers Meeting-க்கு இலங்கை தலைமை வகிப்பது, பிராந்திய சுகாதார ஒத்துழைப்பில் அதன் பங்களிப்பை பிரதிபலிப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.






























