இதேவேளை ஓமானின் லிமா கடற்பகுதிக்குக் கிழக்கே தெற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத பொருள் தாக்கியதில் தீப்பற்றியதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் நிறுவனம் (UKMTO) அறிவித்துள்ளது. லிமாவிலிருந்து சுமார் 8 கடல் மைல் (15 கிலோமீட்டர்) தொலைவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கப்பலின் இடதுபுறம் சேதமடைந்ததுடன் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் உயிரிழப்புகளோ சுற்றுச்சூழல் பாதிப்புகளோ இதுவரை பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததால் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்களுக்கு தெஹ்ரான் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இந்தச் சம்பவங்கள் உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பாதுகாப்பு அச்சத்தையும் பிராந்திய பதற்றத்தையும் அதிகரித்துள்ளன.


































