கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல மக்களால் வழங்கப்பட்ட ஆணையை நடைமுறைப்படுத்தும் செயற்பாடாகும் என்றும் வலியுறுத்தினார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதால், முன்னாள் ஜனாதிபதிகள் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் சட்ட நடைமுறைகளுக்கு அமைய தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். Sri Lanka News.
ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டால் எதிர்க்கட்சி இல்லாமல் போய்விடுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டாலும் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் பின்வாங்க முடியாது என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அண்மையில் நீதிமன்றங்களிலும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிலும் முன்னிலையாகியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் எதிர்காலத்திலும் பல்வேறு தரப்பினருக்கு எதிரான விசாரணைகள் தொடரும் என்றும் எந்த நபருக்கும் விசேட சலுகை வழங்கப்படாது என்றும் நீதித்துறை அமைப்புகள் சுயாதீனமாக செயல்படுவதால் அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் கலாசாரத்தை மாற்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும், ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
































