தனியார் பல் மருத்துவர்களின் தகவல்கள் அணுகப்பட்டதாக தகவல்
அக்டோபர் 29ஆம் தேதி, NSW Health-க்கு உட்பட்ட ஒரே இணையதளத்தில் அனுமதியற்ற அணுகல் கண்டறியப்பட்டது. இந்த இணையதளம், தகுதியான நோயாளிகளுக்கு மானிய விலையில் பல் சிகிச்சை பெற உதவும் Oral Health Fee For Service Scheme திட்டத்துக்குரியது.
இந்தச் சம்பவம் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சேவையகத்தை மட்டுமே பாதித்ததாக Cyber Security NSW தெரிவித்துள்ளது. மற்ற NSW அரசு நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர். சம்பவம், மாநிலத்தின் அவசர இணையப் பாதுகாப்புத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட அளவுகோல்களை மீறியதால் ‘பெரும் சம்பவம்’ என வகைப்படுத்தப்பட்டதாக NSW தலைமை இணையப் பாதுகாப்பு அதிகாரி Marie Patane தெரிவித்தார்.
மூன்றாம் தரப்பு சுகாதார சேவை வழங்குநர்களான பல் மருத்துவர்களுடன் தொடர்புடைய கணிசமான அளவு தனிப்பட்ட அடையாளத் தகவல்கள் அணுகப்பட்டிருக்கலாம் என eHealth NSW தலைமை நிர்வாகி Richard Taggart கூறினார். காவல்துறையின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, சுமார் 4 ஜிபி தரவு திருடப்பட்டிருக்கலாம்.
Strike Force Civic நடவடிக்கையின் கீழ் NSW காவல்துறையின் Cybercrime Squad விசாரணையை முன்னெடுத்து வருகிறது. சம்பவத்துக்கு ஆஸ்திரேலியாவுக்கு வெளியே உள்ளவர்கள் தொடர்புடையிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை உள்ளிட்ட இணையப் பாதுகாப்பு அமைப்புகள் உதவி வழங்குகின்றன. இதுவரை எந்தக் கோரிக்கையோ அச்சுறுத்தலோ கிடைக்கவில்லை; எனினும், பொறுப்பேற்றதாகக் கூறும் ஒருவர் இணையத்தில் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. NSW Health cyber breach தொடர்பாக அடையாளத் திருட்டு உள்ளிட்ட குற்றங்களும் விசாரிக்கப்படுகின்றன.































