மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரதான சந்தேக நபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளில் இவர் சந்தேக நபராக உள்ளார். 2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கி முனையில் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் மற்றும் 2016ஆம் ஆண்டு அதே பொலிஸ் பிரிவில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் ஆகியவை அவற்றில் அடங்குகின்றன.
இந்த வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மவுண்ட் லாவினியா பொலிஸ் பிரிவில் பதிவான பணமோசடி வழக்கு தொடர்பாக 2003ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாகவும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் 2007ஆம் ஆண்டு மவுண்ட் லாவினியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த ரத்மலானையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் மற்றும் மவுண்ட் லாவினியாவைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல் மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.































