சூலூர் சிறுமி கொலை வழக்கின் தீர்ப்பு
கோவை மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த மே 21ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனார். பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய தேடுதலில், கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னந்தோப்பில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்களான கார்த்தி மற்றும் மோகனுக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி கார்த்தி சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும், மோகன் உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் நடந்த 21 நாட்களில் போலீஸார் 819 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதுடன், 221 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. Sulur child murder case வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.
இருவருக்குமான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

































