இனப் பாகுபாடு ஒழிப்பு குழுவின் வழிகாட்டுதல் திங்களன்று வெளியிடப்பட்டது. இந்தக் கடமைகள், அடிமை வர்த்தகம் நடைபெற்ற காலத்தில் இருந்த சட்டங்களின் அடிப்படையில் உருவானவை அல்ல. 1965ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட, சட்டபூர்வமாக கட்டுப்படுத்தும் இனப் பாகுபாடு ஒழிப்பு உடன்படிக்கையிலிருந்தே அவை உருவாகின்றன என ஆவணம் விளக்குகிறது.
அடிமைத்தன இழப்பீடு தொடர்பான புதிய அணுகுமுறை
வரலாற்றுப் பொறுப்பு குறித்த விவாதங்களைத் தாண்டி, தற்போதைய சட்டக் கடமைகளில் கவனம் செலுத்தும் மாற்றமாக இதை குழு வர்ணித்துள்ளது. அரசுகள் தங்கள் தற்போதைய உடன்படிக்கைப் பொறுப்புகளின் கீழ், கட்டமைப்பு சார்ந்த சமத்துவமின்மைகளைச் சமாளிக்க வேண்டும் என ஆவணம் கூறுகிறது.
ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கான அனைத்து நிவாரண அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான இழப்பீட்டு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என குழு வலியுறுத்தியுள்ளது. நீதிமன்றங்களில் இந்த வழிகாட்டுதல் மேற்கோளாக பயன்படுத்தப்படலாம்.
15ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் குறைந்தது 1.25 கோடி ஆப்பிரிக்கர்கள் பிடிக்கப்பட்டு விற்கப்பட்டதாக குழு தெரிவித்துள்ளது. இதை வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டாய இடம்பெயர்வு எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ மன்னிப்பு முதல் நிதி இழப்பீடு வரையிலான கோரிக்கைகள் உலகளவில் வலுப்பெற்றுள்ளன. ஆனால், வரலாற்றுக் குற்றங்களுக்கு அரசுகளையும் நிறுவனங்களையும் பொறுப்பேற்கச் செய்யக்கூடாது என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். மார்ச் மாதத்தில் அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
நிதி இழப்பீடு மட்டும் போதாது என ஆவணம் கூறுகிறது. காப்பகங்களைத் திறப்பது, பொது நினைவுச் சின்னங்களை மறுபரிசீலனை செய்வது, சுயாதீன உண்மை ஆணையங்களை அமைப்பது போன்ற மாற்றத்துக்கான நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது. குழு நிபுணர் பெலா போக்கர் வில்சன், வருத்தம் தெரிவிப்பதைத் தாண்டி கொள்கைகள் மற்றும் சட்டங்களை மறுஆய்வு செய்ய நாடுகள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.



























