சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தலைமையிலான பிரதிநிதிகள் குழு கடந்த 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து தடுப்புக்காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு களவிஜயங்களை மேற்கொண்டு அமைச்சர்கள், அரச அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியது.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் சித்திரவதைக்கு அரசாங்கம் எந்தவிதத்திலும் இடமளிக்காது என்ற தனது கொள்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன் மனித உரிமைகளைப் பாதுகாக்க சட்ட நிர்வாக மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பல அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், சித்திரவதைத் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. குழுவினருக்கு விளக்கமளித்தனர். விஜயத்தின் நிறைவில் சித்திரவதைத் தடுப்பில் இலங்கை காட்டிய ஒத்துழைப்பையும் வெளிப்படைத்தன்மையையும் தடுப்புக்காவல் நிலையங்களுக்கான அணுகலை எளிதாக்கிய செயற்பாடுகளையும் ஐ.நா. உபகுழு உயர்வாகப் பாராட்டியதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




























