போலீஸார் விசாரணையில் வெளிவந்த தகவல்
பல்லலகுப்பம் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார், 58, தன்னிடம் பட்டை தீட்டப்படாத இயற்கையான 7 கற்கள் இருப்பதாக இடைத்தரகர்களிடம் கூறியுள்ளார். அவை ஜோதிடப் பலன்கள் கொண்ட ‘அலெக்ஸாண்ட்ரைட்’ வகையைச் சேர்ந்த அதிர்ஷ்டக் கற்கள் என்றும், சென்னை ரத்தினக்கல் ஆய்வகச் சான்றிதழ்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கற்களை வாங்குவதாகக் கூறிய புருஷோத்தமனை சந்திக்க, ஆனந்தகுமார் அவற்றை எடுத்துக்கொண்டு பேரணாம்பட்டு புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். பின்னர், பல்லலகுப்பம் அருகே தொட்டி கிணறு பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது, முகமூடி அணிந்த இருவர் அவரது வாகனத்தில் இருந்த கற்கள் பையை எடுத்துக்கொண்டு தப்பியதாகப் புகார் அளிக்கப்பட்டது.
மேல்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் புருஷோத்தமனின் கூட்டாளிகளான கோட்டைச்சேரியைச் சேர்ந்த ராகுல், சபரி எனத் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். Vellore stone robbery தொடர்பாக ஆனந்தகுமாரிடமும் விசாரணை நடைபெறுகிறது.
ஏழு கற்களின் மதிப்பு ரூ.25,000 என ஆனந்தகுமார் கூறியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக இத்தொழிலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கற்கள் உண்மையான அலெக்ஸாண்ட்ரைட் கற்களா அல்லது மலிவான கற்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.































