2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எந்தக் காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதிக்குள் இணையவழி மூலம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய அடையாள அட்டையை இன்னும் பெறாத பாடசாலை மாணவர்களுக்காக அதிபர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தேசிய அடையாள அட்டை இல்லாதது பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான தடையாக அமையாது என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் 1911 என்ற உதவி இலக்கத்தையோ அல்லது 0112784537, 0112786616 0112784208 ஆகிய தொலைபேசி எண்களையோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.































