மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலா பகுதியாகிய ரொட்ட்னெஸ்ட் தீவுக்கு அருகிலுள்ள ஹோர்ஸ்ஷூ ரீஃப் பகுதியில் சனிக்கிழமை காலை நிகழ்ந்த சுறா தாக்குதலில் 38 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். அவர் தனது நண்பருடன் கடலுக்குள் ஸ்பியர் பிஷிங் (கயிறு குத்தி மீன் பிடித்தல்) செய்து கொண்டிருந்தபோது திடீரென சுறா தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். கடுமையான காயங்களுடன் அவர் படகின் மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டபோதும் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை.
அந்த பகுதியில் பெரிய அளவிலான வெள்ளை சுறா (Great White Shark) ஒன்று காணப்பட்டதாகவும் தாக்குதல் நேரத்தில் மீனவர்கள் மற்றும் படகு பயணிகள் அருகில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த இடம் பெர்த் நகரத்திலிருந்து சுமார் 31 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா மற்றும் நீர்விளையாட்டு பகுதி ஆகும்.
இந்த சம்பவம் இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பதிவான இரண்டாவது உயிரிழப்பு சுறா தாக்குதலாகும். இதற்கு முன்பும் நாட்டின் சில பகுதிகளில் இதேபோன்ற தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கடல் பகுதிகளில் முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.இந்த துயரமான நிகழ்வு உள்ளூர் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





Leave a Reply