போக்குவரத்துப் பிரிவினரால் இவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என்றும் அவற்றுக்கு எவ்வித பதிலும் அளிக்கவோ இணைப்புகளைத் திறக்கவோ கூடாது என்றும் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் உத்தியோகபூர்வ GovPay டிஜிட்டல் கட்டண முறை, அரச சேவைகளுக்கான கட்டணங்களையும் காவல்துறையால் வழங்கப்படும் அபராதப் பத்திரங்களுக்கான தொகையையும் பாதுகாப்பாக இணையவழியில் செலுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எனினும் GovPay இணையதளத்தைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் பல சம்பவங்கள் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அபராதம் செலுத்தும் முன் அது அரசின் உத்தியோகபூர்வ தளமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் இணைய இணைப்புகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் காவல்துறை பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.





























