கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் சமீபத்திய சுகாதாரப் புள்ளிவிபரங்களின்படி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையிலும் எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து கல்வி அமைச்சராகவும் செயற்படும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சை உள்ளடக்கிய உயர்மட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டு இளம் தலைமுறையினரை பாதுகாக்க கல்வி மற்றும் சமூக நல்வாழ்வுத் துறைகளை ஒருங்கிணைக்கும் செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளானவர்களில் பலர் போதிய விழிப்புணர்வும் சரியான புரிதலும் இல்லாத காரணத்தினாலேயே பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதால் சிகிச்சையை விட நோய் தடுப்பு விழிப்புணர்வுக்கே அரசாங்கம் தற்போது அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், எச்.ஐ.வி தொற்றைத் தடுக்கும் ‘பிரெப்’ (PrEP) மருந்துகள் குறிப்பிட்ட அரச மருத்துவமனைகளின் விசேட கிளினிக்குகள் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவற்றை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்வதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மையமாகக் கொண்டு விரிவான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இளம் தலைமுறையினரை எச்.ஐ.வி தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.






























