யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று (7) யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வளத்திணைக்கள உதவி பணிப்பாளரை சந்தித்து கடற்றொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களை நேரில் முன்வைத்தார்.
குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் கடல் வளங்கள் தொடர்ந்து சேதமடைந்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதுடன் அதனை பாதுகாக்கும் திட்டங்கள் அவசியம் எனவும் பேசப்பட்டது.
அண்மையில் பலாலி பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கை கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்தும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதனால் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வசந்த முதலிகே இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.





Leave a Reply