கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதி வருமானம் உயர்ந்த போதிலும் இறக்குமதி செலவு அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உலக வங்கி பொருளாதார வளர்ச்சியை 3 சதவீதமாகவே கணித்துள்ள நிலையில் வெளிநாட்டு கையிருப்பு எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான சூழலில் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை விட நீதிபதிகளின் சேவைக்கால நீட்டிப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குவது ஏன் என கேள்வி எழுப்பிய அவர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை முதலில் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கைக்கு சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் அணுகுமுறை நாட்டை சர்வாதிகாரப் பாதைக்கு இட்டுச் செல்லும் அபாயம் இருப்பதாகவும் ராஜித்த சேனாரத்ன எச்சரித்தார். மேலும் இத்தகைய மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் பொதுமக்களின் கருத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



























