“ரயிலிலிருந்து இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்ற தலைப்பில் வெளியிட்ட தனது இறுதிக் கட்டுரையில் பல ஆண்டுகளாக நிர்வகித்துவந்த RER A தகவல் தளத்தின் பொறுப்பை மற்றொருவரிடம் ஒப்படைப்பதாக தாமஸ் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரையே தாம் எழுதும் கடைசிக் கட்டுரை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
RER A ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள், ரயில் சேவை மாற்றங்கள், பயணத் தடைகள், கடுமையான வெப்பநிலை, பனிப்பொழிவு மற்றும் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.
கடைசி ரயில்கள் சேவையை நிறுத்திய பின்னர் இரவு நேரங்களில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு வெளியிட்ட கட்டுரைகளும் பயணிகளுக்கான நடத்தை வழிகாட்டியும் தனது முக்கியமான பணிகளில் அடங்கும் என்று தாமஸ் தெரிவித்துள்ளார்.
சேவைத் தடைகள், விபத்துகள், பராமரிப்புப் பணிகள் மற்றும் கடுமையான காலநிலை நிலவிய காலங்களில் பயணிகளிடமிருந்து கடும் விமர்சனங்கள் வந்ததாக அவர் கூறியுள்ளார்.
அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத சந்தர்ப்பங்கள் இருந்தாலும் அலங்கரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக உண்மையான நிலைமையை நேர்மையாகப் பகிர முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
RER A என்பது ரயில் வரைபடத்தில் காணப்படும் ஒரு வழித்தடம் மட்டுமல்ல. தினமும் 13 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வேலைக்குச் செல்லவும், குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கவும் வீடு திரும்பவும் இந்தச் சேவையைப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பயணிகளிடமிருந்து கிடைத்த ஒவ்வொரு செய்திக்கும் பின்னால் ஒரு பயணம், ஒரு கேள்வி அல்லது தனிப்பட்ட அனுபவம் இருந்ததாகவும் அதுவே தனது பணியில் மறக்க முடியாத பகுதியாக அமைந்ததாகவும் தாமஸ் கூறியுள்ளார்.
தாமஸ் தனது பொறுப்பிலிருந்து விலகினாலும் RER A தகவல் வலைத்தளம் மூடப்படாது. புதிய நிர்வாகி விரைவில் பொறுப்பேற்று, ரயில் பராமரிப்புப் பணிகள் சேவை மாற்றங்கள் பயணிகள் அறிவிப்புகள் மற்றும் RER A தொடர்பான பின்னணித் தகவல்களை தொடர்ந்து வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் தள நிர்வாகியாக அல்லாமல் சாதாரண பயணியாக RER A ரயிலில் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் ரயில் நிலையங்களில் பயணிகளை மீண்டும் சந்திக்கலாம் என்றும் தாமஸ் தெரிவித்துள்ளார்.
தனது கட்டுரைகளை வாசித்தவர்கள் பகிர்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்தவர்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு RER A ரயில் சேவை நிறுத்தப்படுவதாகவோ அல்லது தகவல் தளம் மூடப்படுவதாகவோ பொருள்படாது. தாமஸ் நிர்வாகப் பொறுப்பிலிருந்து மட்டுமே விலகியுள்ளார். புதிய நிர்வாகத்தின் கீழ் வலைத்தளம் தொடர்ந்து இயங்கும்.


























