பந்தின் மாற்றத்தை வேகப்பந்து வீச்சாளர் கவனிப்பார்: அக்ரம்
மெல்போர்னில் இருந்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியில் பேசிய அக்ரம், பந்தின் இயல்பான தேய்மானத்துக்கும் மணர்த்தாளால் ஏற்படுத்தப்பட்ட சேதத்துக்கும் தெளிவான வித்தியாசம் இருப்பதாகக் கூறினார். ஒரு வேகப்பந்து வீச்சாளர் பந்தை பார்த்தவுடன் ஏதோ சரியில்லை என்பதை அறிந்துகொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்னிங்ஸ் முழுவதும் வீரர்கள் பந்தின் நிலையை தொடர்ந்து பரிசோதிப்பதால், அசாதாரண கீறல்களை கவனிக்காமல் இருப்பது கடினம் என்றும் அக்ரம் கூறினார். அதேவேளை, ஆஸ்திரேலிய அணித்தலைவர் பாட் கமின்ஸ் தனது நெருங்கிய நண்பர் என்றும், உலகின் முன்னணி அணித்தலைவர்களில் ஒருவராக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், எந்தத் தரப்பையும் ஆதரிப்பதில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
உஸ்மான் கவாஜா தனது சுயசரிதையில், 2018ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தும் திட்டம் குறித்து ஆஸ்திரேலிய அணியினருக்குப் பரவலாகத் தெரிந்திருந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து Sandpapergate controversy மீண்டும் எழுந்தது. இதை கமின்ஸ் முழுமையாக மறுத்து, தானோ பிற வீரர்களோ மணர்த்தாளை மைதானத்துக்குக் கொண்டு வந்தது குறித்து அறிந்திருக்கவில்லை என்றார். முன்னாள் துணைத்தலைவர் டேவிட் வார்னர் கவாஜாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
2018 மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் கேமரூன் பேன்கிராஃப்ட் மணர்த்தாளைப் பயன்படுத்தியது கேமராவில் பதிவானது. இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னருக்கு தலா 12 மாதங்களும், பேன்கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்களும் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்கப்போவதில்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

































