நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,
“இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக மிகுந்த வேதனையளித்த இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட பின்னர் உறுதியுடன் மீண்டு வருகிற சூழ்நிலையிலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தம்
அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,
பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குவதும், மனிதகுல விடுதலைக்கான அர்ப்பணிப்பும் இந்த பண்டிகையின் மையக் கருத்துகள் என தெரிவித்துள்ளார்.
மக்களின் ஒற்றுமைக்கு பாராட்டு
இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் மனிதப் பண்பை, கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனைகளுக்கேற்ப, இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளதாக அவர் பாராட்டினார்.
நம்பிக்கை மற்றும் மீட்பின் செய்தி
பெத்லகேமில் ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தின் விடுதலைக்காக சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, உறுதியுடனும் நம்பிக்கையுடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவ போதனை கூறுகிறது என ஜனாதிபதி நினைவூட்டினார்.
ஒன்றிணைந்து மீண்டெழுவோம்
யதார்த்தத்தின் வேதனையான உண்மைகளை எதிர்கொண்டு, சவால்களை வென்று, ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி,
அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக அமைய வேண்டும் என நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.





Leave a Reply