மூன்றாம் கட்ட அகழாய்வை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்றைய அகழ்வில் இரண்டு சிறுவர்களின் என்புக்கூடுகள் மற்றும் ஒரு சிசுவின் என்புக்கூடு உள்ளிட்ட புதிய எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று உட்கார்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட என்புக்கூட்டை சுத்தம் செய்யும் பணிகளும் இன்றும் தொடர்ந்தன. மேலும் பெரிய என்புக்கூட்டுக்கு அருகில் கண்டறியப்பட்ட சிறிய என்புக்கூட்டின் கீழ்பகுதியில் மற்றொரு சிசுவின் என்புக்கூடும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் செம்மணி மனித புதைகுழியில் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக மொத்தம் 92 நாட்கள் அகழாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 454 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 440 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அகழாய்வுகள் வடக்கு மாகாணத்தின் போர் கால வரலாறு தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகின்றன.































