நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் “ஹீனட்டியன சுபுன்” எனப்படும் சுபுன் மதுஷங்க ஷேன் திலான் சில்வா “களு மல்லி” எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் “பபா” எனப்படும் சமீர சம்பத் ஆகியோர் இந்த வன்முறையின் பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் அண்மைக் கால வரலாற்றில் மிக மோசமான சிறைச்சாலை வன்முறைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்ததுடன் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
இதுவரை 1,200 கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிறைச்சாலை அதிகாரிகளின் வசமிருந்த ஆயுதங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உறுதியான ஆதாரங்கள் இன்றி எவர்மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.




























