அந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடம்பெற்ற பெண் கைதியை “சந்துனி” என்ற பெயரில் அடையாளப்படுத்தி அவர் பிரபல பாடசாலையில் கல்வி கற்று மருத்துவப் பீடத்திற்குத் தெரிவாகிய மாணவி என்றும் காதலன் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள் இருந்ததால் அறியாமலேயே சிறைக்குச் சென்றார் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது.
எனினும் இந்தக் கதையை முதன்முதலில் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட நபர் அது உண்மையான சம்பவம் அல்ல என்றும் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் தானே கற்பனையாக உருவாக்கிய பதிவு என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் தன்னை புலனாய்வு ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்தியிருந்த அவர் உண்மையில் புகைப்படக் கலைஞர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை சம்பந்தப்பட்ட கைதியின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட முடியாது என சிறைச்சாலை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இதனால் நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி மருத்துவ மாணவி அல்லது காதலனால் ஏமாற்றப்பட்டவர் என்ற வகையில் பரவி வந்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்ற சமூக வலைத்தளங்களில் உருவாக்கப்பட்ட பொய்யான வதந்திகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




























