சமூக வலைதளங்களில் வெளியான 46 விநாடி காணொளியில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், நாம் எல்லையை மீறிவிட்டோம், உலகின் ஓட்டத்திற்கு எதிராகச் செல்கிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் மனித உரிமைகளை அங்கீகரிப்பது எப்போது தீவிரவாதமாக மாறியது? கருணை எப்போது அபூர்வமான ஒன்றாக மாறியது?” என கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் சமூகநலக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு இந்த உத்தரவை ஒப்புதல் அளித்தது. ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த நடவடிக்கை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவலாக காணப்படும் குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் பேச்சுக்களுக்கு நேர்மாறானதாக இருப்பதால் உலகளாவிய கவனம் பெற்றுள்ளது. இந்தத் திட்டம், ஏற்கனவே ஸ்பெயின் சமூகத்தில் ஆழமாக இணைந்து வாழும் மக்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் குடியிருப்பு உரிமை வழங்கும் என சாஞ்செஸ் விளக்கினார்.
“நாம் தினமும் சந்தையில், பேருந்தில், நமது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் பார்க்கும் மனிதர்களே அவர்கள். நமது பெற்றோர்களை பராமரிப்பவர்கள், விவசாய நிலங்களில் உழைப்பவர்கள், இந்த நாட்டின் முன்னேற்றத்தை நம்முடன் கை கோர்த்து கட்டியெழுப்பியவர்கள்,” என அவர் தெரிவித்தார். மேலும், “ஸ்பெயின் என்பது அடிப்படையில் அனைவரையும் வரவேற்கும் நாடு. நாங்கள் தேர்வு செய்த பாதை – மரியாதை, சமூக ஒற்றுமை மற்றும் நீதி,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த உத்தரவின் வேர்கள், 2024 ஆம் ஆண்டு 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கையெழுத்திட்ட குடிமக்கள் முயற்சியில் இருந்து உருவானவை. இந்த முயற்சிக்கு கத்தோலிக்க திருச்சபையின் பெரும் ஆதரவும், சுமார் 900 சமூக அமைப்புகளின் ஆதரவும் இருந்தது. நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்தத் திட்டம், இடதுசாரி போடேமோஸ் கட்சி சமூகநலக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து, பாராளுமன்ற ஆதரவு வழங்கியதன் பின்னர் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் பெற்றுள்ளது.






























