நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, எரிபொருள் சேமிப்பு திறன் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார். முத்துராஜவெலயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை ஜெட் எரிபொருள் குழாய் அமைக்கவும், 92,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு வசதிகளை உருவாக்கவும் ரூ.22.34 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் குழாய் மற்றும் சேமிப்பு வசதிகள்
கொலன்னாவையிலிருந்து துறைமுகம் வரையிலான குழாய் திட்டத்துக்காக ரூ.16,332 மில்லியன் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் 18 மாதங்களில் நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் எரிபொருள் இறக்கும் நேரம் 96 மணியிலிருந்து 48 மணியாகக் குறையும். கப்பல் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தாமதக் கட்டணம், நாளொன்றுக்கு சுமார் 30,000 அமெரிக்க டொலர் என்ற அளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் 300,000 நுகர்வோருக்கு இலவச ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கப்பட உள்ளன. இலங்கை மின்சார நிறுவனத்தின் 120 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மானிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூரைச் சூரிய மின்சாரத்துடன் மின்கல சேமிப்பு அமைப்புகளை நிறுவும் குடும்பங்களுக்கு நிதி ஊக்கத்தொகையும் முன்மொழியப்பட்டுள்ளது. ஒரு கிலோவாட்-மணி சேமிப்பு திறனுக்கு ரூ.25,000 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.250,000 வரை, 10 கிலோவாட்-மணி வரையிலான அமைப்புகளுக்கு இந்த உதவி கிடைக்கும். இதற்காக ரூ.3,500 மில்லியன் ஒதுக்கீடு முன்வைக்கப்பட்டுள்ளது. சூரிய மின்சார சேமிப்புக்கான இறக்குமதி மின்கலங்களுக்கு விதிக்கப்படும் 10% துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் Sri Lanka energy security மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை தேசிய மின்வலையுடன் இணைப்பதை ஆதரிக்கும் நடவடிக்கைகளாகும்.






























