நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தாம் இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என்றும் அதன் பின்னர் அங்கிருந்து விலக நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகள் மற்றும் ஆவணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் வழங்கியிருந்தாலும் இதுவரை உரிய விசாரணைகள் நடைபெறவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாகவும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அந்த விவகாரத்தை வெளிப்படுத்தியதன் பின்னர் தமக்கு மிரட்டல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை தம்மை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால் வடக்கில் உள்ள சுயேட்சை பிரதிநிதிகள் அநியாயமாக இலக்காகின்றனர் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரங்கள் தொடர்பில் அரசு சமமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து சுயேட்சை பிரதிநிதிகளுக்கு நியாயமான பாதுகாப்பும் நடவடிக்கையும் வழங்க வேண்டும் எனவும் அர்ச்சுனா ராமநாதன் வலியுறுத்தினார்.





























